தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரிடம் நீண்டநேரம் விசாரணை!

கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் பெறுவதற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22.10.2025) அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்  இன்று நேரடியாகப் பயங்கரவாதத் குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜரானார்.  இந்நிலையில் அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீட்டுக்குக் கடந்த- 18ஆம் திகதி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் முகநூலில் கட்சியின் தலைவர், விடுதலைப் புலிகளின் தலைவர் ஆகிய இருவரும் ஒன்றாகவிருந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதாகத் தெரிவித்து அது தொடர்பான விசாரணைகளுக்குக் கொழும்புக்கு வருமாறும் கடிதத்தை வழங்கிச் சென்றிருந்தனர்..

இதற்கமைய, கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணியகத்துக்கு இன்று காலை சென்ற அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகள் நடந்துள்ளன. வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை-03 மணியளவில் அவர் வெளியேறியுள்ளார்.