யாழ்ப்பாணம் - காரைநகர் கிராமத்தின் விக்காவில் சிவகாமி அம்மன் சனசமூக நிலைய மண்டபத்தில் 03.10.2025 வெள்ளிக்கிழமை மாலை "நீரைக் கொண்டாடுவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வில் நீர்ப்பாவனையாளர் வட்டம் உருவாக்கப்பட்டது.
கிராம மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து ஒழுங்கு செய்த இந்த விழாவில் ஜே - 48 கிராம அலுவலர் சிதம்பரம்பிள்ளை திருமகள், சமுர்த்தி அலுவலர் செந்தில்நாதன் தேவமலர், வஸ்பர் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுநிலை பேராசிரியருமான ந. சிறிஸ்கந்தராஜா, மூத்த நீரியல் ஆய்வாளர் ரமேஸ் பொன்னம்பலம், உளநல மருத்துவர் சி. சிவதாஸ், பல்லுயிர் இணை நிறுவனர் காரை நிரோஜன் மற்றும் வஸ்பர் செயற்திட்டத்தின் சார்பில் ஆய்வாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
முழுத் தீவுக்குமான பாதுகாப்பான நீர் வளத்தை உறுதி செய்யும் செயற்பாட்டின் முதற்படியாக அங்குள்ள சமூக பிரதிநிதிகள் பலர் சேர்ந்து இயக்கவிருக்கும் விக்காவில் பகுதி நீர்ப்பாவனையாளர் வட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடந்த ஐந்து ஆண்டுகளாக காரைநகர் கிராமத்தில் நடைபெற்ற நீர்சார் அளவீடுகள் ஆய்வுகளின் பெறுபேறுகளைத் தொடர்ந்து, அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ள நீர் சார்ந்த தரவுகளை திரட்டும் பணிகளைப் பற்றியும் அதற்கு இசைவான வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட நீர் ஆளுகைக்குரிய மேலும் கட்டமைப்புகளை உருவாக்குவது பற்றியும் பேசப்பட்டது.
தொடர்ந்து ஊர்மக்களின் முழுமையான பங்களிப்பில் உருவான "நீர் வளம் பேணுவோம்" நாடகமும், சித்தாகாஸ் நடன நிறுவனத்தின் இயக்குனரான இராசையா தனராஜின் பரதநாட்டிய ஆற்றுகையும், சிறார்களின் குழு நடன நிகழ்வும், நீர் சார்ந்த பேச்சும் இடம்பெற்றது.
காரைநகர் கிராமம் வெளியில் இருந்து தாங்கிகளில் வரும் நீரை மட்டும் நம்பியிருக்காமல் நிலத்தடி நீரை பேணிப் பாதுகாத்து அந்த நீரையே எதிர்காலத்தில் தன்னியல்பாக பயன்படுத்தும் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் காரைநகர் முழுவதும் உள்ள 9 கிராமசேவையாளர் பிரிவுகளில் இவ்வாறான 9 நீர்ப்பாவனையாளர் வட்டங்களை உருவாக்கி அதன் ஊடாக நீர் வளம் பேணும் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.