வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதிய ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தில் அரசியல் பழிவாங்கல்களும், முறைகேடுகளும் நடந்துள்ளன. எனவே, இந்த விடயம் தொடர்பில் சாதகமான தீர்வு வழங்கப்படும் வரை எமது போராட்டம் தொடருமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நேற்றுச் செவ்வாய்க்கிழமை (14.05.2025) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக இரண்டாவது நாளாக ஒன்றுகூடிய ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாபன விதிக் கோவைகளுக்கு முரணாக இடமாற்ற விசேட மேன்முறையீடு என்ற பெயரில் இடமாற்ற மேன்முறையீட்டுச் சபை அதன் பின்னர் தாபன விதிக் கோவையில் எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படாத நிலையில் அந்தத் தாபன விதிக் கோவையில் உள்ளடக்கப்படாத நடைமுறைகளைப் பின்பற்ற முற்பட்ட சமயம் நாங்கள் இடமாற்றச் சபையிலிருந்து விலகியிருந்தோம். இடமாற்றச் சபையிலிருந்து நாங்கள் விலகிய நிலையில் எங்கள் தொழிற்சங்க உறுப்பினர்களின் உறவுகள், எங்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டு பாரிய முறைகேடுகளும், அரசியல் பழிவாங்கல்களும் நடந்துள்ளமையைச் சுட்டிக்காட்டிக் குறித்த இடமாற்றத்தை நிறுத்தக் கோரி நாங்கள் கோரிக்கைகள் முன்வைத்திருந்தோம்.
திங்கட்கிழமை வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரை நேரடியாகச் சந்தித்து இதுதொடர்பில் கலந்துரையாடிய போதும் அவர் தெளிவான முடிவு எதனையும் தெரிவிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கை ஆசிரியர் சங்கத்தினருக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது தான் மற்றைய தரப்பின் நியாயங்களைக் கேட்டுப் பதில் கூறுவதாகத் தெரிவித்திருந்த போதிலும் பல மணித்தியாலங்கள் கடந்தும் சாதகமான எந்தவொரு பதில்களும் வழங்கப்படவில்லை.
நாங்கள் வடக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடிய போது இடமாற்றத்தில் நடந்த முறைகேடுகளைப் புள்ளிவிபர ரீதியாகத் தெரிவித்திருந்தோம். இடமாற்றத்தின் போதான பக்கச் சார்புகள், இடமாற்றங்களில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட விடயங்கள் அல்லது இடமாற்றச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாகப் பழிவாங்கப்பட்ட விடயங்கள் என்பன தொடர்பாக நாங்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தோம். வடக்கு மாகாண ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான இடமாற்ற நிறுத்தங்கள் தொடர்பிலும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.போதிய காரணங்களின் அடிப்படையில் சில இடமாற்றங்களைத் தான் நிறுத்தியதாக வடக்கு மாகாண ஆளுநர் ஒப்புக் கொண்டார். நீங்கள் போதிய காரணங்களின் அடிப்படையில் நிறுத்தியதாகக் கூறினாலும் போதிய காரணங்களை உள்ளடக்கிய ஆசிரியர்களின் நிலைப்பாடுகளில் அவர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர். இது இடமாற்றச் சபையின் நிபந்தனைகளுக்கு முரணானது என்பதையும் தெரிவித்திருந்தோம்.
எங்கள் தொழிற்சங்கத்தின் 12 பேர்களின் பெயர்கள் வேறொரு தரப்பால் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு எங்கள் சேவை விபரங்கள் பரிசீலிக்கப்பட்டதாக நாங்கள் அறிந்த நிலையில் அந்த விடயங்களையும் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். தனக்கு முறைப்பாடு கிடைத்த நிலையில் இதுதொடர்பில் ஆராயச் சொல்லியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்றார்.