நல்லூரான் பெருந் திருவிழாக் காலத்தில் அடியவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை நீக்குமாறு கோரிக்கை!

 

நல்லூர்க் கந்தன் பெருந் திருவிழாக் காலத்தில் அடியவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை நீக்குமாறு இந்து தன்னார்வ தொண்டர் சங்கம்- இலங்கை யாழ்.மாநகரசபை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மேற்படி சங்கத்தினர் யாழ்.மாநகரசபை ஆணையாளர்  ச.கிருஷ்ணேந்திரனுக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,      

யாழ்.மாநகர சபையானது நல்லூர்க் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்துடன் இணைந்து ஒருமாதகாலத் திருவிழாவைக் கடந்த காலங்களில் மன நிறைவாக நடாத்தியமை மகிழ்ச்சியைத் தருகிறது. எனினும், கடந்த ஆண்டின் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத் திருவிழாக் காலத்தில் ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களுக்கு ஏற்பட்ட  அசௌகரியங்கள் குறித்த தகவல்களைப் பத்திரிகைச்  செய்திகள் மற்றும் பக்தர்கள் தெரிவித்த அதிருப்தி கருத்துக்கள் மூலம் அறிந்து கொண்டோம்.

பரிசீலனை செய்யப்பட்ட அனுபவங்கள் மற்றும் பத்திரிகைத் தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமான வீதித் தடைகள் பொருத்தமற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டதால் அடியவர்கள் சன நெரிசலுக்கு உட்பட்டு மயக்கம் அடைந்து பெரும் அவலத்தைச் சந்தித்தனர். அவசரமான நேரத்தில் நோயாளர் காவு வண்டி கூட நுழைய முடியாத நிலை காணப்பட்டது .

மேலும், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமான கடைகள் வியாபாரதாரர்களுக்காகக் குத்தகைக்கு வழங்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் நடமாட முடியாமல் வீதியின் மத்திய பகுதிக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாகச் சப்பரத் திருவிழா நாளில் ஏற்பட்ட நெருக்கடியின் போது நடைபாதையில் நகர்ந்து கொண்டிருந்த பக்தர்களை வியாபாரிகள் "எங்கள் கடைகளுக்குள் வர வேண்டாம், நாங்கள் காசு கொடுத்துத் தானே கடைகளைப் பெற்றுள்ளோம்" என வீதியின் நடுப் பகுதி நோக்கி விரட்டியதைக் கண்ணூடு பார்க்க முடிந்தது. தொடர்ச்சியான வீதித் தடைகளுக்கு இடையில் நடைபாதையின் இருபுறமும் வியாபார நிலையங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த  சூழ்நிலையில் பெருமளவு மக்கள் தெருவின் நடுப் பகுதியில் அபாயகரமான விதத்தில் சிக்குண்டு இருந்தனர்.

நூற்றாண்டுக் காலம் கடந்த நல்லூர் ஆலய மாண்பானது கெடும் வகையில் கடந்த ஆண்டு சமூக வலைத் தளங்களில் எழுந்த விமர்சனங்களும், கிண்டல்களும் கண்டு பெரும் மன வேதனையடைந்தோம். இவ்வாறான செயற்பாடுகள் மெய் அடியவர்களின் ஆன்மீக உரிமைகளையும், ஆலயத்தின் புனிதத் தன்மையையும் குலைக்கின்றன.

எனவே, இந்துத் தன்னார்வ தொண்டர் சங்கம் சார்பாகக் கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களுக்கு நெரிசலற்ற மற்றும் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்தும் வகையில் அடியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இலகுவாக நகரக்கூடிய விதத்தில் வீதித் தடைகளை அமைத்தல், மற்றும் பொருத்தமற்ற தடைகளை நீக்கல்.

வியாபார ஸ்தலங்கள் மற்றும் விளம்பரங்கள் மெய் அடியார்களின் வழிபாட்டு உரிமைக்கும், பக்திமயமான சூழ்நிலைக்கும் இடையூறாக அமைவதால் திருவிழாக் காலத்தில் ஆலயச்  சுற்றுப்புறங்களில் கடைகள் மற்றும் வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்காமல் மக்கள் அமைதியாக வழிபாட்டை மேற்கொள்ளும் வகையில்  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டைப் போல் அல்லாமல் நோயாளர்காவு வண்டி மற்றும் அவசர சேவைகள் தேவையான இடத்தை இடையூறின்றி அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றி நல்லூர்க் கந்தசுவாமி ஆலயச் சூழலில் ஆன்மீகச் சூழலை நிலை நாட்டவேண்டி மெய் அடியார்கள் சார்பாக இந்து தன்னார்வத் தொண்டர் சங்கம் கோரிக்கை வைக்கிறது எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.