வடக்கில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 17, 212 மாணவர்கள்

 


கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகும் நிலையில் வடக்கு மாகாணத்திலிருந்து 17, 212 மாணவர்கள் தோற்றுகின்றனர். கல்விப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளைய தினம் ஆரம்பமாகும் நிலையில் குறித்த பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வெற்றியடைய உளமார வாழ்த்துவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் இன்று ஞாயிற்றுக்கிழமை (24. 11.2024) இரவு வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் கடந்த ஆண்டு பெற்றுக் கொண்ட முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் மாணவர்கள் செயற்படுவார்கள் என நம்புகின்றேன். உங்களின் கடின உழைப்பு, உறுதிப்பாடு ஆகியன வெற்றிக்கான திறவுகோல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

உங்களில் நம்பிக்கை வைத்து உங்களாலான சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி வெற்றிபெற வாழ்த்துகின்றேன் எனவும் குறித்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.