கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக் கொள்ளும் நடைமுறை இன்று புதன்கிழமை (06.11.2024) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்ய முடியும் எனப் பதில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்தார்.
எனினும், இம்மாத இறுதி வரை கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகள் வழங்கப்பட்டுள்ளமையால் இந்த முறையின் மூலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பம் முதல் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அவசரத் தேவையின் காரணமாக நபர் ஒருவர் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பாராயின் அவர் அதனை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் பதில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய மேலும் குறிப்பிட்டார்.