இன்றைய தினமும் அஞ்சல்மூல வாக்களிப்பிற்கு ஏற்பாடு!

எதிர்வரும்- 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு மூன்றாவது நாளாக இன்று திங்கட்கிழமை ( 04.11.2024) நடைபெறவுள்ளது.

முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம்- 31 ஆம் திகதியும், கடந்த முதலாம் திகதியும் அஞ்சல்மூல வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம்- 31 ஆம் திகதி மாவட்டச் செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் சகல பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான நாளாக ஒதுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த முதலாம் திகதியும், இன்றைய தினமும் முப்படையினரும், அனைத்து அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வாக்களிப்பதற்கு முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, குறித்த மூன்று தினங்களிலும் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு எதிர்வரும்-07ஆம், 08 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.