//]]>

முக்கிய செய்தி

பிரதான செய்திகள்

Sunday, February 18, 2018

யாழில் இன்று ஊடகச் செயலமர்வு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இணையவும் வாய்ப்பு

"நவீன ஊடக கலாசாரத்தை நோக்கிய பயணம்" எனும் தலைப்பிலான கலந்துரையாடலும், ஊடகத் துறைசார் ஆர்வலர்களுக்கான வழிகாட்டலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(18)  இல- 125, பிரதான வீதி, தனி நாயகம் அடிகளார் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ள குடும்ப மருத்துவ நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

காலை-09 மணியிலிருந்து நண்பகல்-12 மணி வரை கலந்துரையாடலும், நண்பகல்- 12 மணி முதல் பிற்பகல் -03 மணி வரை ஊடகத் துறைசார் ஆர்வலர்களுக்கான வழிகாட்டலும் இடம்பெறும்.

தமிழ் ஊடகத்துறையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கலந்துரையாடல் அடிப்படையிலான ஊடக பயணமாக இந்த ஊடகச் செயலமர்வு அமையவுள்ளது.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் இலங்கை ஊடகப் பயிற்சி நிறுவனம் என்பன இணைந்து இந்த  ஊடகச் செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை, இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் தம்மைப் பதிவு செய்ய விரும்பும் வடமாகாண ஊடகவியலாளர்கள் இந்தச் செயலமர்வின் போது 500 ரூபா செலுத்தித் தமக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற முடியுமென சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் யாழ். தர்மினி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

(எஸ்.ரவி-)

பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கமைய  பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிரணியினருக்கு உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் என்ற அமைப்பின் சார்பில் சட்டவாளர்கள் லால் விஜேநாயக்க, கே.எஸ்.இரத்னவேலு,  சுதத் நெத்சிங்க,  பிரபோத ரத்நாயக்க, ஹரின் கோமிஸ் ஆகியோர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் 19 ஆவது திருத்தத்துக்கு முன்னர் பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கிருந்தது. ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அந்த அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது,

எனவே, நாடாளுமன்ற வழக்கத்தின்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலமே பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். இதில் சிறிலங்கா அதிபர் எந்தப் பங்கையும் வகிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

Saturday, February 17, 2018

ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் ஆரம்பம்(Photos)

யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(18) சுபநேரமான முற்பகல்- 11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு- 08.30 மணிக்கு திருமஞ்சத் திருவிழாவும்,  26 ஆம் திகதி  திங்கட்கிழமை மாலை- 05 மணிக்கு வேட்டைத்திருவிழாவும்,  27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு- 08.30 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 28 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல்- 10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், அடுத்தமாதம் 01 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-09 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் பிற்பகல்-06 மணிக்குக் கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது. 


(எஸ்.ரவி-)

மாணவிகளைத் துஸ்பிரயோகங்களிலிருந்து பாதுகாக்க குப்பிளானில் அனந்தி சசிதரன் வெளியிட்ட முக்கிய தகவல்(Video)

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவிகளைத் துஸ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தற்காப்புக் கலையை எமது மாணவிகளுக்குப் பயிற்றுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக  வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
யாழ். குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை(16) மாலை  குப்பிளான் வடக்கு கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகிலுள்ள விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் க. காராளசிங்கம் தலைமையில் நடைபெற்ற போது முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில்  மேலும் தெரிவிக்கையில்,

வறுமையிலுள்ள மாணவிகளையும் இந்தத் திட்டத்திற்குள் உள்ளீர்த்து வலுவுள்ளதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பாக மகளிர் விவகார அமைச்சு என்ற முறையில் நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.

வடமாகாணத்தில் பெண் மாணவிகள் தூரவிடத்துப் பாடசாலைகளுக்குச் செல்கின்ற போது அவர்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். கடந்தகால யுத்தத்திற்குப் பின்னர் எமது மாணவிகளைப் பாதுகாப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

எனவே, தூரவிடத்துப் பாடசாலைகளுக்குச் செல்வதால் எமது மாணவிகள் எதிர்நோக்கும் பாதிப்புக்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அருகிலிருக்கும் பாடசாலைகளில் அவர்களை அனுமதிப்பது பொருத்தமானதொன்றாக அமையும் என்றார்.

இதேவேளை,  வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வில் ஆற்றிய முழுமையான உரையினை இங்கே இணைக்கப்பட்டுள்ள காணொளி(வீடியோ) இணைப்பில் காணலாம்.


 (எஸ்.ரவி-)

கோண்டாவிலில் திடீரெனக் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

யாழ். கோண்டாவில் சந்தியின் நாற்புறமும் இன்று சனிக்கிழமை(17) இரவு துப்பாக்கி ஏந்திய கோப்பாய்ப் பொலிஸார் திடீரெனக் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், குறித்த பகுதியில் ஒருவிதப் பரபரப்பு நிலவுகிறது.

சந்தேகத்துக்கிடமாகப் பயணிக்கும் வாகனங்கள் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுவதுடதுடன் சந்தேகத்துக்கிடமானவர்கள் பொலிஸாரால் விசாரிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

(தமிழின் தோழன்-)

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நாளை

யாழ். மாவட்டத் தாச்சி விளையாட்டுச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நாளை ஞாயிற்றுக்கிழமை(18) முற்பகல்- 10 மணி முதல் யாழ். இணுவில் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சங்கத் தலைவர் செ. சண்முகலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொள்கையளவில் ஒன்றிணைய வடக்குமுதல்வர் அவசர வேண்டுகோள்

கொள்கையளவில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.

யாழ். புத்தூர் ஆவரங்கால் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை(17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களுடைய விடிவுக்காக நாங்கள் எந்தக் கொள்கைகளை எம்முள் கொண்டிருக்கிறோமோ அந்தக் கொள்கையில் பிடிப்புடையவர்களாக  ஒற்றுமையுணர்வுடன் எமது பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும்.

தவிர இந்த விடயம் தொடர்பாக கட்சி ரீதியாக என்னால் எதனையும் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கமைய வடக்கில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(தமிழின் தோழன்-)

ஒருவாரமாக காணாமல் போனவர் யாழில் எலும்புக்கூடாக மீட்பு

யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒருவார காலமாகக் காணாமல் போயிருந்த குடும்பஸ்தரொருவர் இன்று (17)எரிந்து எலும்புக்கூடான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எழுதுமட்டுவாள் தெற்கு காட்டுப் பகுதியிலேயே குறித்த சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

எழுதுமட்டுவாள் வடக்குப்  பகுதியைச் சேர்ந்த ஆண் குடும்பஸ்தரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

(தமிழின் தோழன் -)

யாழில் இன்று 'கல்' நூல் வெளியீட்டு விழா

சித்திரபாட ஆசிரியர் பா. இராமணாகரனின் 'கல்' சிறுவர் கதைகள் நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை(17) பிற்பகல்-03 மணி முதல் யாழ். கோப்பாய்ப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ்நாடு தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த ஆய்வாளரும், கவிஞருமான கோ. வாமனன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகைசார் வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் பேராசிரியை திருமதி- மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜெனீவாவில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இலங்கை விவகாரம்!

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. 

ஜெனீவாவிலுள்ள பிரித்தானியத் தூதுவரின் பணியகத்தில் நேற்று(16) முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் என  26 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.   இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடம் வகிக்கும் என்பதால் அது தொடர்பான நகர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நகர்வுகள் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் ஏற்படக் கூடிய தாக்கங்கள் என்பன தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற  உறுப்பினர் சுமந்திரன் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைக் காரணம் காட்டி அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து பின்வாங்க அனைத்துலகச் சமூகம் இடமளிக்கக் கூடாது எனவும்,  ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.